திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி, 41 நாட்கள் பூஜை நடைபெறுவது மண்டல கால பூஜையாகும். அதற்காக பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது.
கோவிலின் தலைமை தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரு தலைமையில் சரணகோஷம் முழங்க நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, கண்டரரு மகேஷ்ரரு, மூல மந்திரம் சொல்லிக் கொடுத்து, சன்னதிக்குள் அழைத்துச் சென்றார். சன்னதி திறக்கப்பட்டதும், தரிசனத்திற்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமியே சரணம் ஐயப்பா என்று முழங்கினர்.
நவ. 17ம் தேதி, புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி மீண்டும் நடை திறந்து விளக்கேற்றுவார். அப்போது முதல் மண்டல காலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதன் பிறகு கணபதி ஹோமம் தொடங்கும். டிசம்பர் 28ம் தேதி வரை ஐயப்பனை, இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தடையின்றி தரிசிக்கலாம்.