சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குபூஜைக்காக மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் தொடங்கவுள்ளது. நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை மண்ட பூஜை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜை 2026 ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை தமற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கானவர்கள் வருவார்கள். இதனால், பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. அதுபோல தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டிலிருந்து கொல்லம் வரை (ரயில் எண். 07111/07112) சிறப்பு சேவையும் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ள இந்த சிறப்பு ரயில் சேவைகள், ஐயப்ப பக்தர்களுக்கான சபரிமலை யாத்திரையை எளிதாக்குவதையும், மற்ற பயணிகளுக்கான நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
சபரிதமலை பக்தர்களின்வருகையை கருத்தில் கொண்டு, அவர்களின் வசிதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகாராஷ்டிரா மாநிலம் ஹஜூர் சாஹிப் நந்தெத்திலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07111), சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கொல்லம் நிலையத்தை அடையும்.
மீள்பயணமாக, நவம்பர் 22 முதல் ஜனவரி 17 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 5.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07112), ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி வழியாகச் செல்கிறது.
இச்சிறப்பு ரயிலில் 2 ஏசி இரண்டடுக்கு படுக்கை பெட்டிகள், 8 ஏசி மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 4 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு பெட்டி ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.