சபரிமலை:
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி தொடங்கி வைப்பார்.
7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்கள்.
இந்நிலையில் அக்.22 இரவு வரை பூஜைகள் நடைபெற்று 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்டோபர் 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அக்டோபர் 25 பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ.16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.