திருவனந்தபுரம் :
ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, கோயில் நிர்வாகம்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனில் முன் கூட்டியே முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே, சாமி கும்பிட இயலும்.
தினமும் ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பேரும், சிறப்பு தரிசன நாட்களில் 5 ஆயிரம் பேரும் தரிசனத்துக்கு அனுமதிப்படுகிறார்கள்.
தரிசனம் செய்ய ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் 86 ஆயிரம் பக்தர்களை மட்டுமே, இந்த 2 மாத காலத்தில் அனுமதிக்க முடியும் என்ற நிலையில் சுமார் 42 ஆயிரம் பேர் காத்திருப்பு பட்டியலில் அதாவது, ‘வெயிட்டிங் லிஸ்டில்’ வைக்கப்பட்டுள்ளனர்.
சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள பக்தர்கள், தங்கள் முன்பதிவை ரத்து செய்தால், வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாமி கும்பிட வாய்ப்பு கிடைக்கும்.
கோயிலில் நுழைவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை நடத்தி, ‘கொரோனா இல்லை’ என சர்டிபிகேட் அளிக்கும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
– பா. பாரதி