திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேவஸ்தான நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ள போலீசார், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந் நிலையில் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஓட்டல்களில் பணியாற்றிய 7 பேருக்கும் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சபரிமலையில் இதுவரை 220க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்புகள் அதிகமாகி வருவதால், அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறது.