டெல்லி:
பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா சார்பாக  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
          கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. அங்கு அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகின்றன.
இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக சொல்லியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்திய தலைவர்கள் மற்றும் காஷ்மீர் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
காஷ்மீரில் தலைதூக்கியுள்ள வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் இந்தியா மீதான தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாத வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் மற்றும் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில இந்தியாவின் சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.  ஆகஸ்டு  3 மற்றும் 4 தேதிகளில் மாநாடு நடைபெறுகிறது.
இந்தியா பாகிஸ்தான் உறவில் சுமூக நிலை இல்லாத நேரத்தில் இஸ்லாமாபாத் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா முக்கிய அங்கம் வகிப்பதால் கண்டிப்பாக சார்க் மாநாட்டில் பங்கேற்பது  என தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பயணத்தின் போது இருநாட்டின் உறவு குறித்தும் பேச அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஜனவரியில்  பதான்கோட் விமான படைத்தளத்தில்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு  யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை. தற்போது  சார்க் மாநாட்டிற்காக  ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.