“நடிகர்களா நாடாள ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அப்படி நடந்துவிடக்கூடாது” என்கிற ரீதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கருத்து சொல்ல தயங்கி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், தனது கருத்தை நம்மிடம் தெரிவித்ததார்:
“நடிகர்கள் முதலில் மக்களுக்காக போராடி சிறை செல்லட்டும் என்கிறார் வீரமணி. இவர் எந்த பிரச்சினைக்காக போராடி சிறைக்குச் சென்றார்.
மறைந்த என் நண்பர் திருவாரூர் தங்கராசு, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷணன் போன்றவர்கள் , சிறைக்குச் சென்றதை செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன்.. டிவி நியூஸ்களில் கேட்டிருக்கிறேன். வீரமணி சிறைக்குப்போனதாக படித்ததோ, கேட்டதோ இல்லை.
கேட்டால், ஏதாவது காகித்தை எரித்தேன்… சாலை மறியல் செய்தேன் என்பார். காலையில் திருமண மண்டபத்தில் போய் கைது என்ற பெயரில் இருந்து பஜ்ஜி போண்டா சாப்பிட்டு மாலையில் திரும்பியிருப்பார்.
இவரது சிறைவாசங்களும், சினிமா சிறை மாதிரி செட்டிங்தானே.. சினிமா நடிகர்களைப் பற்றிப்பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
பொது வாழ்க்கையில், ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் நேரடியாக ஆட்சியைப் பிடிப்போம், முதல் அமைச்சர் கிரீடத்தைச் சூட்டிக் கொள்வோம் என்று சொல்கிறார்கள் என்கிறார்.
கட்சி அறக்கட்டளை பெயரில் இவர் நடத்தும் கல்லூரிகளில் கொள்ளையாக நன்கொடை பிடுங்கிக்கொண்டுதானே மாணவர்களை சேர்க்கிறார்.. இதுதான் சமூகசேவையா?
இதற்கு முன் சினிமாக்காரர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் போதும் என்கிறார்.
சினிமாவில் இருந்து வந்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லாரையும் அண்டிப்பிழைத்தவர்தானே இந்த வீரமணி.
யார் ஆட்சியில் இருக்கிறார்களோ.. அவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் இவர்தான் பெரிய நடிகர்.
ஜெயலலிதாவும் திரைத்துறையில் இருந்தவர்தான். அவருக்கு சமூக நீதிகாத்த வீராங்கணை என்று வாயெல்லாம் பல்லாக புகழாரம் சூட்டியவர்தானே இந்த வீரமணி.
சினிமாவில் நடிப்பதற்கும், அவர்களின் தனி வாழ்விற்கும் சம்பந்தம் இல்லை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று ஆதங்கப்படுகிறார் வீரமணி.
பொதுமேடையில் இவர் பேசுவதற்குமம் இவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறதா.
திராவிடர் கழகம் என்பது மக்களுக்கானது என்று மேடையில் பேசுகிறார். ஆனால் தனக்குப் பின் திராவிடர் கழகத்தை தன் மகனுக்கு எழுதி வைத்திருக்கிறார். இவர் போல இவரது மகன் பெயரளவுக்குக்கூட போராட்டங்களில் கலந்துகொண்டது இல்லையே..
அண்ணா அவர்களே எம்.ஜி.ஆரை வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்தினார் – அது தவறாக முடிந்தது என்கிறார் வீரமணி.
இதை எம்.ஜி.ஆரை அண்டிப்பிழைத்தபோது சொல்லியிருக்க வேண்டியதுதானே.. ஏன், ஜெயலலிதா இருந்தபோது சொல்லியிருக்க வேண்டியதுதானே.
இப்போதுதான் இவருக்குத் தெரிந்ததா?
எம்.ஜி.ஆர். இருந்தவரை வாய்மூடி இருந்த வீரமணி, இப்போது, “எம்.ஜி.ஆர். ஆட்சியில்
பொருளாதார வளர்ச்சி, நாட்டுநலத் திட்டங்கள் என்பதில் குறிப்பிடத்தக்க மிகப் பெரிய சாதனை என்று சொல்லுவதற்கும் ஏதுமில்லை” என்கிறார்.
“ஜெயலலிதா சர்வாதிகாரி” என்கிறார். மீண்டும் சொல்கிறேன். இவர்தானே ஜெயலலிதாவுக்கு விருது பட்டம் எல்லாம் கொடுத்தார். அ.தி.மு.க. அமைச்சர்கள் போலவே ஜெயலலிதாவை போற்றிப் புகழ்ந்தாரே..!
“ஊழலை ஒழிப்போம் என்று சொல்லும் கமல்ஹாசன் இருக்கும் சினிமா துறையில் கருப்பு பணம் இல்லையா” என்கிறார் வீரமணி. இவர் தொடர்பான அறக்கட்டளைகள், நிதி நிறுவனம், கல்லூரி வரவு செலவுகளை சரியாக வெளிப்படுத்துகிறாரா. மனதைத் தொட்டுச் சொல்லட்டும்.. கருப்புபணம் ஏதும் வீரமணியிடம் கிடைாயதா?
பகுத்தறவாளியான கமல், பாஜகவுடன் இணைந்து செயல்படுவேன் என்பது நியாயமா என்கிறார் வீரமணி.
ஒட்டுமொத்த தேசத்தையும் நல்லரசு, வல்லரசு என்ற நிலைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதை உணர்ந்து பாஜகவுடன் இணைந்து செயல்படுவேன் என்கிறார் கமல். இதுதான் பகுத்தறிவு.
வீரமணி போல, காரியத்துக்காக ஆளுங்கட்சியினர் காலைப்பிடிப்பது பகுத்தறிவு அல்ல. சுயநலம்.
நிஜ வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்கள்தான் திருடர்களாக, ரவுடியாக, பொறுக்கியாக இருக்கிறார்கள். அதனால் சிபிஐ ரெய்டுகிளில் சிக்குகிறார்கள். ஆனால் நடிகர்களோ சினிமாவில்தான் ன் ரவுடி, பொறுக்கியா கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான்.
முட்டாள்த்தனமாக பிறரை கேவலப்படுத்தும்படியாக பேசி பேசி, மு.க.ஸ்டாலினுடன் அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்து, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு குழி பறிக்க திட்டமிடுகிறாரோ வீரமணி என்று தோன்றுகிறது.
இன்னொரு விசயம். திராவிடர் கழகம், தேர்தல் அரசியலில் இல்லை என்கிறார். இப்படி, ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்காத.. நின்றாலும் வெல்ல முடியாத வீரமணி தேர்தல் அரசியல் குறித்து ஏன் அதிகமாக பேசுகிறார் என்று புரியவில்லை.
மீண்டும் சொல்கிறேன்.. நேர்மையாக உழைத்து, நேர்மையாக சம்பாதிக்கும் நடிகர்களைப் பற்றிப் பேச வீரமணிக்கு அருகதை இல்லை” என்று ஆவேசமாக சொல்லி முடித்தார் எஸ்.வி.சேகர்.