சியோல்:
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 90 வீடுகள் எரிந்து சாம்ப்லானாது. மேலும், 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கடலோர நகரமான உல்ஜினில் உள்ள மலையில் நேற்று காலை தொடங்கிய தீ, 3,000 ஹெக்டேர்களுக்கு மேல் (7,400 ஏக்கர்) அருகிலுள்ள சாம்சியோக் நகரத்திற்கு பரவியது. குறைந்தது 90 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் எரிந்து சாம்பலானது. கிட்டத்தட்ட 6,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று தென் கொரியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 1,950 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் துருப்புக்கள் மற்றும் 51 ஹெலிகாப்டர்கள் மற்றும் 273 வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாம்சியோக்கில் உள்ள எல்என்ஜி உற்பத்தி நிலையத்திற்கு தீ பரவாமல் தடுக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ எப்போது கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.