டில்லி:

ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்களை நிர்வாகம் அழித்துவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சுவர் மற்றும் தரையில் இருந்த ரத்தக கறைகள் அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ரியான் கல்வி நிறுவன குழுமத்தை சேர்ந்த மண்டல தலைவர் பிரான்சிஸ் தாமஸ் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை தலைவர் ஜெயஸ் தாமஸ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் சோஹ்னா நீதிமனறத்தில் போலீசார் ஆஜர்படுத்தி 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ர் அனுமதி கோரினர். ஆனால், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி தேவனாஸ் மீனா என்ற 6 வயது மாணவர் தெற்கு டில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்திலும் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டார். இவர் தான் தற்போதும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்ப்டடுள்ளார். பள்ளி வளாகத்தில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு இவர் தான் பொறுப்பு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேருந்து நடந்துனர் அசோக்குமார் (வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் சிஇஒ ரியான் பின்தோ மற்றும் அவரது பெற்றோரும், பள்ளி நிறுவனர்களுமான கிரேஸ், அகஸ்டின் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பள்ளியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையை குர்கான் துணை கமிஷனர் வினய் பிரதாப் சிங் சமர்ப்பித்துள்ளார்.

இதில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில்,‘‘பள்ளியில் பேருந்து ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் என தனித்தனியாக கழிப்பிடங்கள் இல்லை. சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவில் இல்லை. கழிப்பிடங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை. பள்ளியின் சுற்றுசுவர் இடிந்துவிழுந்துள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மும்பையில் உள்ள பள்ளியின் தலைமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள 4 பேர் கொண்டு போலீஸ் குழு சென்றுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதி ஆதாரம் குறித்து அப்போது கேட்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நீர்ஜா பத்ரா விசாரணையின் போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கந்தசா சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பத்ரா உள்ளிட்ட 3 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குர்கானில் உள்ள ரியான் குழுமத்தின் அனைத்து பள்ளிகளும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய சோஹ்னா போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.