லண்டன்: ஏடிபி பைனல்ஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார் ரஷ்யாவின் மெட்வதேவ்.
அரையிறுதியில், ஸ்பெயினின் ரபேல் நாடலை தோற்கடித்த இவர், இறுதிப்போட்டியில், ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை வென்று கோப்பையைக் கைப்பற்றினார்.
உலகின் ‘டாப் 8’ வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் அரையிறுதியில், ஜோகோவிக் மற்றும் நாடல் ஆகியோர் வெளியேற, டொமினிக் தியம் மற்றும் மெட்வதேவ் ஆகியோர் இறுதிக்குள் முன்னேறினர்.
இந்நிலையில், பரபரப்பான இறுதிப்போட்டியில், முதல் செட்டை இழந்த மெட்வதேவ், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை கைப்பற்றி, கோப்பையை வென்றார்.
இந்தப் போட்டி, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதேவ் வசமானது. ரஷ்ய வீரர் ஒருவர் இத்தொடரில் பட்டம் வெல்வது 11 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்துள்ளது. இத்தொடரில், மெட்வதேவ், உலகின் நம்பர் 1 ஜோகோவிக், நம்பர் 2 ரபேல் நாடல் மற்றும் நம்பர் 3 டொமினிக் தியம் ஆகிய முதல் மூன்று வீரர்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.