கீவ்: உக்ரைன் மீது 50நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படையின் போர்க்கப்பல் ஒன்றை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் மூலும் மூழ்கடித்துள்ளனர். கருங்கடலில் இருந்து தாக்குதல் நடத்திய  ரஷியாவின் போர்க்கப்பல் உக்ரைன் தாக்குதலால் தீப்பிடித்து  மூழ்கியது என்ற  உக்ரைன் தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இருதரப்புக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ள இந்த போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு வழிகாட்டியாக கருங்கடலில் இருந்து செயல்பட்டு வந்த  ஏவுகணை கப்பல் மோஸ்க்வா, உக்ரைன் படையினரின் ஏவுகனை தாக்குதலில் சேதமடைந்து கடலில் மூழ்கியது.

உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர் கப்பல் சேதம் அடைந்து தீப்பிடித்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.  ஒடேசாவிற்கு தெற்கே 60 முதல் 65 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தீப்பிழம்புடன் காணப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். சேதமடைந்த மாஸ்க்வா ஏவுகணை கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷிய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.  போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அதில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்ததாகவும், எனினும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் ரஷியா குறிப்பிட்டுள்ளது.