ரஷ்யாவின் தடுப்பு மருந்து செலுத்தப்பட அனைவருக்கும் (100%) கொரோனாவிர்க்கு எதிரான ஆன்டிபாடி செயல்பாடுகள் தூண்டப்பட்டதாக தி லான்செட்டில் வெளியான ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க அளவிலான பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்துக்கு இரஷ்ய அரசு ஏற்கனவே உரிமம் வழங்கியுள்ளது குறிபிடத்தக்கது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இதுவரையிலான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாக உள்ளதென கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் “ஸ்பூட்னிக்-V” கோவிட் -19 தடுப்பு மருந்து அதன் ஆரம்ப கட்ட சோதனைகளில் பங்கேற்ற அனைவருக்கும் நோயெதிர்ப்பு ஆன்டிபாடி செயல்பாடுகளை உருவாக்கியதாக தி லான்செட் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட அதன் முடிவுகள் கூறுகிறது.
இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் 76 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளின் முடிவுகள், 100% பங்கேற்பாளர்கள் புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும், குறிப்பிடத்தக்க கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும் லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கப்பட்டது. இதன்படி, உரிமம் பெற்ற உலகின் முதல் தடுப்பு மருந்து எனவும் அறிவிக்கப்பட்டது. “38 ஆரோக்கியமான பெரியவர்கள் உட்பட 42 நாள் சோதனைகளில் பங்கேற்பாளர்களிடையே எந்தவிதமான மோசமான பக்க விளைவுகளையும் உண்டாக்கவில்லை,” என்றும் லான்செட்டில் கூறப்பட்டுள்ளது.
“COVID-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிறுவ, ஒரு போலி மருந்து வழங்கப்பட்ட பங்கேற்பாளருடன் ஒப்பிடுவது உட்பட பெரிய, நீண்டகால சோதனைகள் மற்றும் மேலும் கண்காணிப்பு தேவை” என்று கூறப்பட்டது. சோவியத் யூனியனால் ஏவப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-V என்று பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சோதனை மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் வரை சில மேற்கத்திய வல்லுநர்கள் அதன் பயன்பாட்டிற்கு எதிராக எச்சரித்துள்ளனர்.
ஆனால் இப்போது சர்வதேச அளவில் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒரு பத்திரிகையில் முதன்முறையாக வெளியிடப்பட்ட முடிவுகள் மற்றும் கடந்த வாரம் தொடங்கப்பட்ட 40,000 பங்கேற்பாளர்கள் கொண்ட வலுவான சோதனைகள் தொடங்கப்பட்ட நிலையில், ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் இம்மருந்து வெளிநாடுகளில் விமர்சிக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். “ரஷ்ய தடுப்பு மருந்துக்கு களங்கம் விளைவிக்கும் தெளிவான குறிக்கோளுடன், கடந்த மூன்று வாரங்களாக விடாமுயற்சியுடன் கேட்கப்பட்ட மேற்கின் அனைத்து கேள்விகளுக்கும் இந்த முடிவுகளை வெளியிட்டு பதிலளிக்கிறோம்” என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறினார்.
“கடந்த வாரம் தொடங்கப்பட்ட ஸ்பூட்னிக்-V தடுப்பு மருந்து சோதனைக்கு ஏற்கனவே குறைந்தது 3,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்ப முடிவுகள் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் எதிர்பார்க்கப்படுவதாகவும் டிமிட்ரிவ் கூறினார். ஆரம்ப கட்ட சோதனைகளின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், சர்வதேச தடுப்பூசி அணுகல் மையத்தின் முன்னணி ஆய்வாளர் இந்த முடிவுகள் “ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன ஆனால் மிகச் சிறியவை” என்றார். மேலும், “எந்த COVID-19 தடுப்பு மருந்தின் மருத்துவ செயல்திறன் இன்னும் காட்டப்படவில்லை” என்றார்.
தடுப்பு மருந்தைக் கண்டறியும் போட்டி
COVID-19 தொற்றுநோயைக் கட்டுபடுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கான போட்டியில் பெரும் நிறுவனங்களும், அரசுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த வைரஸ் இது உலகளவில் 850,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்று, சுமார் 26 மில்லியன் பேரை பாதித்துள்ளது. அரை டசனுக்கும் அதிகமான மருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சோதனையும் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது. பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா, அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் ஃபைசர் உட்பட பலர் தங்கள் COVID-19 தடுப்பு மருந்துகள் செயல்படுகின்றனவா என்பதை அறிய காத்துக் கொண்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட சோதனைகள் ஸ்புட்னிக்-V தடுப்பு மருந்து T- செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒருவகை வெள்ளை செல்களைத் தூண்டுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் T – செல்கள் வகிக்கும் பங்கை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த செல்கள் ஆன்டிபாடிகளை விட நீண்ட கால பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்து இரண்டு அளவுகளில் வழங்கப்படுகிறது. மனித அடினோ வைரஸ்கள் Ad5 மற்றும் Ad26. இந்த டெலிவரி பொறிமுறையைப் பயன்படுத்துவது COVID-19 தடுப்பு மருந்தைக் குறைவான செயல்திறன்மிக்கதாக மாற்றக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் பலர் ஏற்கனவே Ad5 அடினோவைரஸ் தொற்றுக்கு ஆளாகி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
சீனாவிலும் அமெரிக்காவிலும், சுமார் 40% மக்கள் முந்தைய Ad5 தொற்றில் இருந்து அதிக அளவு ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்காவில், இது 80% வரை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கமலேயா இன்ஸ்டிடியூட்டில் தடுப்பு மருந்து உருவாக்குநர்களில் ஒருவரான டெனிஸ் லோகுனோவ், ராய்ட்டர்ஸிடம் பேசும்போது, தடுப்பு மருந்தின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், முந்தைய எந்தவொரு நோய் எதிர்ப்பு சக்தியையும் சமாளிக்க Ad5 இன் வலுவான அளவைப் பயன்படுத்துகிறது. அரிதான Ad26 அடினோவைரஸை அடிப்படையாகக் கொண்ட பூஸ்டர் டோஸ் மேலும் மேலும் உதவக் கூடும். ஏனெனில் தற்போதைய மக்கள்தொகையில் சமமான மற்றும் பரவலாக நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, என்றார்.
ஆண்டு இறுதிக்குள் அதன் சாத்தியமான COVID-19 தடுப்பு மருந்தின் மாதத்திற்கு 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது, படிப்படியாக உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 6 மில்லியன் டோஸாக அதிகரிக்க உள்ளனர். உலகில் உள்ள அனைத்து தடுப்பு மருந்தின் சுமார் 60% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஸ்பூட்னிக் V தடுப்பு மருந்தின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது தொடர்பாக தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் இந்திய அரசு மற்றும் அதன் முன்னணி தயாரிப்பாளர்களுடன் நாங்கள் நெருக்கமாக விவாதித்து வருகிறோம் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறினார்.