மாஸ்கோ: பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்ட ரஷ்யாவின் அரசியல் சாசன திருத்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்.
இந்த மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், அதிபர் பதவிக்கான கால வரம்பு தளர்வு உள்ளிட்ட அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், 48 பக்கங்கள் கொண்ட அரசியல் சாசன திருத்த மசோதாவில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, இந்த மசோதாவானது ரஷ்யாவின் அரசியல் சாசன நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இந்த மசோதாவை அங்கீகரிப்பதா அல்லது தள்ளுபடி செய்வதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
நீதிமன்றம் அங்கீகரிக்கும்பட்சத்தில் மசோதா மீது ஏப்ரல் 22ம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பெருவாரியான ஆதரவு கிடைத்தால் மசோதா சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வாக்கெடுப்பை இணையத்தில் நடத்துவது குறித்து ரஷ்ய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கை மோசடிக்கு வழி வகுக்கும் என்று எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.