வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடவடிக்கைகள், மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலக்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அறிவித்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மற்றுமொரு நடவடிக்கையாக, மார்ச் 16ம் தேதி முதல், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்பொருட்டு, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.