மாஸ்கோ
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி 2 வருடத்துக்கு எதிர்ப்புச் சக்தி அளிக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கமேலியா ஆய்வு மையம் கூறி உள்ளது.
உலகெங்கும் கடும் பாதிப்பை உண்டாக்கி வரும் கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கமேலியா ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி ரஷ்ய அரசால் அனுமதி பெற்றுள்ளது.
உலகில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி எனக் கூறப்படும் இந்த மருந்துக்கு ரஷ்யாவின் முதல் செயற்கைக் கோளின் பெயரான ஸ்புட்னிக் வைக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் ரஷ்யாவில் இந்த தடுப்பூசி ரஷ்யாவில் பரவலாகப் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 91.4% திறன் உள்ளது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கமேலியா ஆய்வுக் கூட தலைவர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எபோலா தடுப்பூசியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனையில் 91.4% திறன் உள்ளதாக அறியப்பட்டதுடன் இந்த தடுப்பூசி 2 வருடங்களுக்கான எதிர்ப்புச் சக்தியை அளிக்க வல்லதாகும்.
ஆனால் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி எத்தனை காலம் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் எனச் சொல்லப்படாவிட்டாலும் சோதனை முடிவுகளைக் கொண்டு அந்த தடுப்பு மருந்து 4 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் சரியான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் சரியாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.