மாஸ்கோ: உக்ரைன் மீது தீவரிமான தாக்குதலை ரஷ்யா தொடுத்து வரும் நிலையில், அங்கு ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மேலும், உக்ரைனை சிதைக்கும் நோக்கில், அங்குள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் பல பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளனர். உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசியும், டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உளள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலின் காரணமாக நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைனின் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது. மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், அதிகமாக மின்சக்தியை நுகரும் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மின்நுகர்வை கவனமாக பயன்படுத்தினால் அடுத்து வரும் நாட்களில் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்” என்று உக்ரைன் அதிபர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சமீபத்தில் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபர் புதின் தெரிவித்தார். இதனால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கெர்சன் நகரில் இருந்து மக்கள் சிலர் படகு மூலம் வெளியேறி வருகிறனர்.
இந்த பரபரப்பான சூழலில், இந்திய அரசு அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் மோசமான பாதுகாப்பு நிலைமையை மேற்கோள் காட்டி, இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தற்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.