டில்லி

ன்னும் 18 முதல் 19 மாதங்களில் இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைகள் வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின்  அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்குத் தொடர்கிறது.  எனவே முன்னெச்சரிக்கையாக ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணையான எஸ் 400 ஏவுகணையை வாங்க இந்தியா முடிவு செய்தது.   இந்த எஸ் 400 ரக ஏவுகணைகள் சுமார் 400 கிமீ தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத விமானங்களை வழி மறித்துத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

இது குறித்த பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரஷ்யாவில் இருந்து ரூ.40000 கோடி மதிப்பில் எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்திய ஒப்பந்தம் இட்டது.   இந்த ஏவுகணைகள் வரும் 2020க்குப் பிறகு வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.    தற்போது ரஷ்யாவின் துணைப் பிரதமர் யூரி போரிசோ இது குறித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “எஸ் 400 ஏவுகணைகள் இந்தியாவுக்கு விற்கப்படுவது குறித்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளும் கையெழுத்து இட்டுள்ளன.  இதற்கான முன்பணத்தை இந்தியா அளித்து விட்டது  ஏற்கனவே திட்டமிட்டபடி இன்னும் 18-19 மாதங்களில் அனைத்து ஏவுகணைகளும் இந்தியாவுக்கு வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.