கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற புத்தமத திருவிழாவின்போது, கோவிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்த யானை ஒன்றுக்கு திடீரென மதம் பிடித்த நிலையில், யானையின் தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் பிரபலமான புத்தமதத் திருவிழா நடைபெற்றது. சுமார் 600 வருடங்களுக்கு  மேலாக கொண்டாடப்படும்  இந்த விழாவானது,  இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே கோட்டி என்னுமிடத்தில் நடைபெற்றது. அங்குள்ள ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

திருவிழாவின்போது, இரண்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கைகள் ஒரு புறம் நடக்க விமரிசையாக விழா நடைபெற்று வந்த வேளையில், முன்னாள் சென்ற யானை ஒன்றுக்கு திடீரென மதம் பிடித்து, பிளிறிக்கொண்டு ஓடத் தொடங்கியது. அதை அடக்க பாகனும் பின்னாலேயே ஓட, அதே நேரத்தில் எதிர்புறத்தில் இருந்து மற்றொரு யானையும் ஓடி வர, இந்த களேபரத்தில் சிக்கியும், யானையின் தாக்குதலுக்கும் பலர் ஆட்பட்டனர்.

இதில்,  இரண்டு யானைகளுக்கும் இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

திருவிழாவின்போது நடைபெற்ற வான வேடிக்கை மற்றும் மேளதாளங்களில் அதீக ஒலி காரணமாகவே யானைகள் மதம் பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.