டில்லி,
ந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன்  ரஷியா போர் ஒத்திகை செய்வதற்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக ரஷியா, பாகிஸ்தானு டன் நட்பு பாராட்டி வருகிறது. சமீபத்தில் ரஷியா பாகிஸ்தானிடையே கூட்டு போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள  உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக 19 இந்திய வீரர்கள் இறந்த நிலையில், உலக நாடுகள் பாகிஸ்தானை கண்டித்து வரும் வேளையில், ரஷியா – பாகிஸ்தான் கூட்டு பயிற்சி நடைபெற்றது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
modi-pudin
தீவிரவாதிகள் தாக்குதலால் ரஷியா தனது கூட்டு ராணுவ பயிற்சியை வாபஸ் பெறும் என இந்தியா எதிர்பார்த்தது.  ஆனால் ரஷியா திட்டமிட்டபடி பயிற்சியை நடத்தியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு வி‌ஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையை ரஷியா எடுத்து வருகிறது. இதனால் இந்தியா, ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இதுதொடர்பாக ரஷியாவில் உள்ள இந்திய தூதர் பங்கஜ்சரண்  நிருபர்களிடம் கூறியதாவது:-
”பயங்கரவாதத்திற்கு ஸ்பான்சர் செய்வது, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது பாகிஸ்தானின் கொள்கையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாகிஸ்தானுடன் ராணுவ ஒத்துழைப்பு என்பது தவறான அணுகுமுறையாகும்,
இது மேலும் பிரச்சனையை மட்டுமே உருவாக்கும் என்று நாங்கள் ரஷியாவிடம் எடுத்து உரைத்து உள்ளோம் என்று ரஷியாவிற்கான இந்திய தூதர் பங்கஜ் சரண் ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
சமீப காலமாக பாகிஸ்தானுடன் ரஷியா அதிக நட்புறவு வைத்திருப்பது இந்தியாவிற்கு எதிரான செயலாக கருதப்படுகிறது. பாகிஸ்தானுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டது தவறான நடவடிக்கையாகும். இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் நாங்கள் ரஷியாவிடம் கூறியிருக்கிறோம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாங்கள் 3-வது தடவையாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவாவில் வருகிற சனிக்கிழமை ரஷியா-இந்தியா வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது.  பிரிக்ஸ் மாநாட்டின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இதில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் இந்தியா ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.