டில்லி
வங்கியில் இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்த பட்ச தொகை அதிகரிக்கப் பட்டது. அத்துடன் அதற்கு குறைந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப் பட்டது. இந்நிலையில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வங்கிகள் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த செய்தியில், ”வங்கிகள் வரும் 20ஆம் தேதி முதல் இலவச சேவைகளை முழுமையாக நிறுத்தப்படும். இதனால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போதும், பணம் செலுத்தும் போதும், புது காசோலைகள் தேவை என விண்ணப்பிக்கும் போதும், வங்கிக் கணக்கு புத்தகங்களை அப்டேட் செய்யும் போதும் கட்டணம் செலுத்த நேரிடும். அது மட்டுமின்றி காசோலைகளை வங்கிகளில் டிபாசிட் செய்யும் போது ரூ. 10 வரை கட்டணம் செலுத்த வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இதை வதந்தி எனக் கூறி கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து வங்கிகளும் இது குறித்து விளக்கத்தை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
ஆனால் இந்த விளக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவி உள்ள அதிருப்தியக் குறைக்கவில்லை. இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர், “தற்போது அது போல திட்டமில்லாமல் இருக்கலாம். ஆனால் விரைவில் வரக்கூடும் என அச்சம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.