பாட்னா: தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், வடமாநிலங்களில் பரபரப்பை ஏற்பட்டது. இது பலமாநிலங்களின் சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், வடமாநிலங்களைச்சேர்ந்த மாநில அரசுகள், அதிகாரிகளைக்கொண்ட குழுக்களை அனுப்பி தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வருகின்றன.

இதுதொடர்பாக இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ போலியானது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பரப்பப்படும் போலி காணொளிகள் தொடர்பாக பீகாரில் உள்ள ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த அமன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைப்பேசியிலிருந்து இது போன்ற பல காணொளிகள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்தர் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வதந்தி பரப்பியது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 10 பேர் கொண்ட போலீசார் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒரு தற்கொலை வழக்கு கொலை வழக்கு போன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி மற்றும் 4போலீசார் தமிழகத்திற்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.