பீதியாக்கிய வெடிச் சத்தமும்.. அவிழ்த்துவிடப்பட்ட கதைகளும்..
கொரோனா வைரஸ் பாதிப்பால் பீதியும், கலக்கமும் அடைந்துள்ள பெங்களூரு நகரப் பொதுமக்களை நேற்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் உருவான மர்ம வெடிச்சத்தம் பெரும் பீதியை உருவாக்கியது.
ஒய்ட்பீல்டு, சி.வி.ராமன் நகர், உல்சோர் உள்ளிட்ட பகுதிகளில் காதை செவிடாக்கும் வண்ணம் ஏற்பட்ட இந்த ஒலியால் நகரவாசிகள் உறைந்து போனார்கள்..
குருடர்கள் யானையை ’’பார்த்த’’ கதையாக ’’இது கண்டிப்பாக நில நடுக்கம் தான்’’ என்று சிலர் சொல்லிக்கொண்டார்கள்.
‘’ நோ. ..நோ.. குவாரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது’’ என்றது இன்னொரு தரப்பு.
‘’ இது இடி முழக்கம்’’ என்று சத்தியம் செய்தது, வேறொரு கூட்டம்.
உண்மை என்ன என்பது இரவு 9.30 மணி வாக்கில் தெளிவு படுத்தப்பட்டது.
‘’இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூப்பர் சோனிக் விமானம் வானில் பறந்து வழக்கமான சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட சத்தம் தான் இது.’’ என்று விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.
‘’ சூப்பர் சோனிக் போர் விமானத்தைச் சோதனை செய்ய விதிகள் உள்ளன. தரையில் இருந்து 11 கி.மீ. உயரத்தில் பறந்து சென்று இது போன்ற சோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் நிறைந்த பகுதியில்,தாழ்வான உயரத்தில் பறந்தபடி, சோதனை செய்தது தவறு’’ என்கிறார்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர்.
– ஏழுமலை வெங்கடேசன்