சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.
“சாதாரண ஜூரம்தான். தற்போது நலம்பெற்றுவிட்டார். ஆனாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது
இடையில் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகள் பரவ, அதை மறுத்தது மருத்துவமனை. மேலும், “வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து மீண்டும்,ஜெயலலிதா உடல் நிலை குறித்த பதட்டமான  ஆனால் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
j
இரு நபர்கள் சந்தித்துக்கொண்டால் முதலில் பேசும் விசயம், ஜெயலலிதா உடல் நிலை பற்றித்தான் இருக்கிறது. அலைபேசி உரையாடல்களிலும் இவ்விசயமே முக்கியத்துவம் பெறுகிறது. சமூகவலைதளங்களிலும் மறைமுகமாக ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன.
இது மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.
பெரும் எண்ணிக்கையில் தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஜெயலலிதா. அதோடு, ஏழு கோடி தமிழக மக்களின் அரசுத் தலைவரும் அவர்தான். அவரது உடல் நிலை பற்றி அறிய, தமிழக மக்களுக்கு உரிமை உண்டு.
தவிர பெரும் செல்வாக்குள்ள கட்சித் தலைவருக்கு அதுவும் ஆட்சியில் உள்ளவருக்கு உடல் நலக்குறைவென்றால் சமுதாயத்தில் எப்படிப்பட்ட எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அவரது உடல் நிலை பற்றிய வதந்திகள் பரவாமல் தடுக்கும் பொறுப்பும், வாய்ப்பும் அவரது அரசுக்கே இருக்கிறது.
வீண் வதந்திகள் பரவி, மாநிலத்தில் பதட்டமான சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.
இது மிகவும் நவீன வசதிகள் பெருகிவிட்ட காலம். தகவல் தொடர்புகள் என்பது எளிதாகிவிட்டது. ஜெயலலிதா மனது வைத்தால், மக்களுக்காக ஒரு நிமிடம் உரைாயற்றி அந்த வீடியோவை தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பச் செய்யலாம். அவரது கூற்றுப்படி, ஜெயா டிவிக்கும் அவருக்கும் எந்த்த தொடர்பும் இல்லாவிட்டாலும், அந்த டிவி முன்னுரிமை கொடுத்து இந்த வீடியோ காட்சியை ஒளிபரப்பும். அந்த டிவி மட்டுமல்ல.. அனைத்து டிவிக்களுமே ஒளிபரப்பும். இணையதள பத்திரிகைகளும் ஒளிபரப்பும்.
சமூகவலைதளங்களிலும்  அந்த வீடியோ பரவும். ஆக, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இது ஜெயலலிதாவின் – தமிழக அரசின் கடமை.
செய்வார்களா?