நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில், ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலியால், அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து பதவி ஏற்க வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளை கைப்பற்றி உள்ளதுடன் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக குறைந்த அளவிலான வெற்றியையே பதிவு செய்துள்ளது. இதையடுத்து மாற்று கட்சியினரை திமுகவுக்கு அழைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. கட்சி மாற மறுப்பவர்களை மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பான நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, திமுக பிரமுகர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியும், காவல்துறை பாதுகாப்புக் கோரியும், பரவை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இதற்கிடையில் உள்ளாட்சி அமைப்புகளின், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதால் தலைவர்பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், 18 வார்டுகளை கொண்ட திசையன்விளை பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக அதிமுகவில் 9 பேர் மைற்றும் ஒருவர் பாஜகவை சேர்ந்தவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், பேரூராட்சி தலைவர் பதவி திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அதிமுக உறுப்பினர்களை சிலரை திமுகவுக்கு இழுக்க முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அது பலனளிக்காத வகையில், கவுன்சிலராக பதவி ஏற்றங்கள் உங்கள் மண்டையை உடைப்போம் என்று ஆளும்கட்சியினர் அதிமுக, பாஜக உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மாவட்ட செயலாளர் மனு அளித்திருந்த நிலையில், அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் மிரட்டி கடத்த திட்டமிட்டிருப்பதாகவும், தங்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து காத்து கொள்வதற்காக ஹெல்மெட் அணிந்து வந்ததாகவும் அதிமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று பதவி ஏற்க வந்த அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் தலையில் ஹெல்மெட்டு அணிந்து வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.