சென்னை: இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்து அதிரடிபடையின் மாநில தலைவர் தமிழ்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இறைச்சிக்காக மாடுகள் வாகனங்களில் எடுத்துச்செல்வது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், இறைச்சிக்காக மாடுகள் மற்றும் எருமைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் போது, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், வழியிலேயே அவை இறந்து விடுவகின்றன. எனவே அவற்றை எடுத்துச் செல்லும் போது துன்புறுத்தாமல் கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், மிருகவதை தடைச் சட்ட விதிகளை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, மாடுகள் மட்டும் அல்லாமல் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, கோழி உள்ளிட்டவைகளும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறது. இதுபோன்ற துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் உரிய விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இது தொடர்பாக அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.