சென்னை:

தேர்வு விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் என தமிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அடுத்த வாரம் பிளஸ்2 தேர்வு தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள நிலையில், பொதுத் தேர்வு எழுதும் அறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேர்வு அறையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு, தேர்வுக்குரிய விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிந்து அவற்றை சரிபார்த்திட வேண்டும். 

தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். 

தங்களது மேஜை, நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச் சீட்டுகளும் இல்லை என்பதை முன்பே உறுதி செய்திட வேண்டும். 

விடைத்தாளில் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வு எண்ணை கண்டிப்பாக எழுதக்கூடாது.

தேர்வு  எழுதும்போது கணக்குகள் போட்டுப் பார்க்க விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

கூடுதல்  விடைத்தாள் வேண்டும் என்றால் கடைசி 2 பக்கங்கள் எழுதுவதற்கு முன்பாகவே, அறை கண்காணிப்பாளரிடம்  தெரிவிப்பதன்மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். 

தேவையில்லாமல் எழுதப்பட்ட விடைகளை கோடிட்டு அடிக்கும்  நிகழ்வுகளில், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும். அங்கு  தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக்கூடாது. 

விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில  விடைகளையோ தேர்வரே அடித்துவிட்டால் ஒழுங்கீன செயல் எனக்கருதி தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு, வரும் இரு  பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் விடைத்தாளில் அடித்தல் கூடாது. 

தேர்வர்கள்  அனைத்து விடைத்தாள்கள் எழுதிய பிறகு மீதம் உள்ள காலிப் பக்கங்களை கோடிட வேண்டும்.

நேரத்தை  மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக் கடிகாரங்களை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும்.

தேர்வுக்கு வராதவர்களின் இருக்கையில் சென்று அமராமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர்ந்து தேர்வு எழுத  வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.