மும்பை:
மும்பை செல்வதற்காக தனியார் விமானத்தில் பயணம் செய்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, விமான நிறுவன ஊழியர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இது குறித்து சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும். எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இண்டிகோ விமானத்தில் மும்பைக்கு பயணம் செய்தபோது, அஜீதேஷ் என்கிற விமான ஊழியர் என்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டார். விமான சிப்பந்தி ஆஷிமா எச்சரித்தபோது அவரிடமும் மோசமாக நடந்து கொண்டார்.
இது போன்ற ஊழியர்களால் இண்டிகோ நிறுவனத்தின் மீதான மதிப்பைச் சீரழித்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இண்டிகோ நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘கூடுதல் எடை கொண்ட பையை விமானத்தினுள் சிந்து கொண்டுவந்தார். இது தவறு. இந்த விதிமுறையை எல்லாப் பயணிகளிடத்திலும் கடைப்பிடிக்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.
இது தொடர்பான விவாதங்களை எங்கள் ஊழியர்கள் சரியாகவே நடந்து கொண்டார். சிந்துவின் மேலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபிறகு அந்தப் பையை விமானத்திலிருந்து சரக்குப் பகுதிக்குக் கொண்டு சென்றோம். பிறகு பயணத்தின் முடிவில் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
சிந்துவின் சாதனைகளில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதேசமயம் பாதுகாப்புச் செயல்பாடுகளும் எங்களுக்கு முக்கியம். எங்கள் ஊழியர் அவர் பணியைத்தான் செய்தார். இதை சிந்து வரவேற்பார் என நம்பிக்கை கொள்கிறோம்’’ எனப் பதில் அளித்துள்ளது.