ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. அங்கே, மற்றுமொரு போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்சினையைத் தீர்க்க முன்வராத மற்றும் அதேசமயம் ஊழியர்களை மிரட்ட நினைத்த மாநில அரசு, 48000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போராட்டத்தைத் தொடர்கின்றனர். அரசோ, தனியார் ஆட்கள் மூலமாக பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே 4 பேர் தற்கொலை செய்த நிலையில், தற்போது ஐந்தாவதாக ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாபூபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அவுலா நரேஷ் என்ற ஓட்டுநர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துள்ளார். அவர் தனது இறப்பிற்கு முன் வேண்டுகோள் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மரணமே கடைசியானதாக இருக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் ஆர்டிசி தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆர்வலர்கள் மருத்துவமனையில் கூடி வேலைநிறுத்தம் செய்தனர். மாநில அரசிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். ஆர்டிசி தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்து வருகிறது.