சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்கள் செல்ல தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

Must read

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

2006ம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017ம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அத்தோடு, பக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்ஹோத்ராவின் கருத்துக்கு நேர்மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின் மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார்பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோ மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நாடு முழுவதும் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கின் தீர்ப்பை பொருத்தே, கேரள அரசியல் நிலைபாடுகளில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article