இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கே பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புவதாக கூறியதோடு நிற்காமல், முஹம்மதலி ஜின்னாவை வானளாவ புகழ்ந்ததற்காக 2005 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை இழந்தார் அத்வானி.
ரத யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உழைத்த ஒரு தலைவரையே ஆட்டுவிக்கும் வல்லமை படைத்த பெரியண்ணன் பாணியில் இயங்கக் கூடிய இயக்கமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக வளர்ந்து இந்திய அரசியலில் கோலோச்சும் அளவுக்கு உயர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடந்த ஏழாண்டு மோடி மற்றும் அமித் ஷா கூட்டணி தலைமையில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் சரிவை சந்தித்துள்ளது என்பது மிகையல்ல.
நாடு முழுவதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மற்றும் மந்திரி பிரதானிகளின் ரகசியங்களை ரகசிய காப்பையும் மீறி அறிந்துகொண்டு அவர்களை ஆட்டுவிக்கும் திரைமறைவு இயக்கமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். க்கு இந்த சரிவு வேதனையை அளித்தபோதும், மோடியை விட்டால் வேறு வழியில்லை என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டுள்ளது.
இயக்கம் வேறு அரசியல் வேறு என்று இயங்கிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய இரண்டும் சிறுபான்மையினர், காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். எடுக்கும் முடிவையே செயல்படுத்தும் நிலையில் உள்ளது. சொல்லப்போனால் பா.ஜ.க. வினருக்கு அரசியல் பயிற்றுவிக்கும் பள்ளியாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.
பா.ஜ.க. வின் உட்கட்சி விவகாரங்களுக்கு தீர்வு காண்பதும், தான் பரப்பும் இந்துத்துவ கருத்துகளால் பா.ஜ.க. வுக்கு சிக்கல் ஏற்படும் போது அதை சீர்செய்வதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பணியாக இருந்து வருகிறது.
பா.ஜ.க. வின் தேர்தல் வெற்றிக்கு உழைத்திட தேவையான தொண்டர்படையை திரட்டி தரும் ஆர்.எஸ்.எஸ். அதற்காக பா.ஜ.க. வின் மாநில கட்சி அலுவலகங்களில் கட்டளையிடும் பணியை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது.
கலாச்சார இயக்கமாக தன்னை காட்டிக்கொள்ள நினைத்தாலும் பா.ஜ.க.வின் அரசியல் பயிற்றுப் பள்ளியாகவே அனைவராலும் அறியப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம், கடந்த ஏழு ஆண்டுகளாக தான் அனுபவித்து வந்த அதிகாரத்தை மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரிடம் இழந்து வருவதாகவே தெரிகிறது.
இந்து ஆலயங்களுக்கு சென்று அனைத்து விதமான வழிபாடுகளையும் தானே மேற்கொண்டு தன்னை ஒரு இந்து என்று பிரகடன படுத்திக்கொள்வதில் வருத்தப்படாத பிரதமராக வளம் வரும் மோடி தங்கள் பள்ளியை சார்ந்த ஒரு மாணவர் என்பதே அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்டோர் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வருத்தப்படாத தலைவராக மோடி இருப்பதும் அவர்களுக்கு உற்ச்சாகத்தை தருவதாக உள்ளது.
பா.ஜ.க. வின் செயல்பாடுகளை கண்காணித்து அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிவந்த இயக்கம் இப்போது மோடியின் வளர்ச்சியைக் கண்டு அவருக்கு துணை நிற்கும் ஒரு துணை அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது நாடறிந்த ரகசியம்.
இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இவர்களின் செயல்பாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். அடிபணிந்து கிடைப்பதுடன், தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மூலம் லட்சக்கணக்கான இந்துக்கள் தங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், இந்து தலைவராக தன்னை முன்னிலை படுத்திக்கொண்ட மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் குரல் கொடுக்க முடியவில்லை என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.
இதுகுறித்து பேசுவது மோடியை பலவீனப்படுத்தும் என்பதோடு அது எதிரிகளுக்கு வாய்ப்பளிப்பதாகி விடும் என்று மிகவும் கவலைப்படுகிறது. அதற்காக, கங்கையில் பிணங்கள் மிதப்பதை சதி வேலை என்று கூறும் அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். என்பதே உண்மை.
மோடி – அமித்ஷா பதவியேற்ற ஏழே ஆண்டில் தரைதட்டி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். எனும் கப்பல் மீண்டும் மிதக்குமா என்பது அதற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை கொண்டே வரும் நாட்களில் தெரியவரும்.
நன்றி : தி வயர்