பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் நடத்தும் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே மத துவேஷத்தை உருவாக்கும் வகையில், பள்ளி மாணவர்களைக் கொண்டு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நாடகம் நடத்தினர்.
‘இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில், அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் உட்பட 4 பேர் மீது ஐபிசியின் 295 ஏ மற்றும் 298 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவரும், அமைப்பின் தென்-மத்திய பிராந்திய செயற்குழு உறுப்பினரும், கர்நாடக மாநிலஆர்எஸ்எஸ் தலைவருமான கல்லட்க பிரபாகர் பட் (kalladka Prabhakar Bhat) என்பவருக்கு சொந்மான ஸ்ரீ ராம வித்யகேந்திர உயர்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மூலம் நாடகம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா உள்பட பல மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அனைத்து மதங்களையும் சார்ந்த மாணவர்களும் படித்து வரும் அந்த பள்ளியில், மாணவர்களி டையே, மத துவேஷத்தை பரப்பும் வகையிலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்திலும், வகையிலும், பாபர் மசூதி இடிக்கப்படுவது போன்ற நாடகம் நடத்தப்பட்டது. அதில், மாணவர்களைக் கொண்டு பாபர்மசூதி இடிக்கப்படுவது போலவும், அதன்மீது மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி ஆடுவதுமாக உள்ளது. பின்னர், அந்த இடத்தில் வண்ண விளக்கு களால், ராமர்கோவில் அமைக்கப்படுவது போல உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பி.எஃப்.ஐ செயற்பாட்டாளரும் பள்ளியின் அதே பகுதியில் வசிப்பவருமான அபுபக்கர் சித்திக் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் அந்த பள்ளியின் தாளாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தக்ஷினா கன்னடத்தின் பன்ட்வாலில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
295 ஏ பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கல்லட்க பிரபாகர் பட், நாராயண் சோமய்யாஜி, வசந்த் மாதவ் மற்றும் சின்னப்பா கோட்டியன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக தக்ஷினா கன்னட காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி பிரசாத் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கூறிய பள்ளியின் தாளாளர், கல்லட்கா பட், பாபர் மசூதி இடிக்கப்பட்டது, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது குறித்து ஒரு நாடகத்தைக் காண்பிப்பதில் தவறில்லை என்றும், “அது ஒரு மசூதி அல்ல. அது ஒரு கட்டிடம் மட்டுமே. இது நாம் சித்தரிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு. இதுபோல ஏற்கனவே ஜூலியன்வாலா பாக் படுகொலை குறித்தும், நாங்கள் சித்தரித்துள்ளோம் என்று கூறியவர், அதை யாராவது முன்னிலைப்படுத்தியிருக்கிறார்களா? இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன, நம் நாட்டில் நடந்த அநீதிகளை நாங்கள் காட்ட வேண்டும், அதையே நாங்கள் செய்தோம் என்று தெரிவித்து உள்ளார்.