விருந்தாவன்
உ பி யில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும் என முதல்வர் யோகிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அறிவுரை கூறி உள்ளார்.
உ பி மாநிலம் விருந்தாவன் இல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வருடாந்திர ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடை பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் அவர் சக அமைச்சர்களான கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசும் போது ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், “உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முதல்வர் யோகி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் ஜாதிச் சண்டைகள், பலாத்கார குற்றங்கள், கொடூர மற்றும் கவுரவக் கொலைகள், பசுக்களின் மீதான வன்முறை போன்றவைகளால் அரசு மிகவும் கெட்ட பெயரைப் பெற்றுள்ளது. அதை சரியாக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பேசிய ஆர் எஸ் எஸ் பிரதிநிதிகள் பலரும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை, பலரையும் துயருக்குள்ளாக்கியதாக தெரிவித்தனர். குறிப்பாக சிறு தொழில் முனைவோர் பலரின் தொழில் முடங்கிப் போனதாகவும், அவர்களிடம் பணி புரிந்தவர்கள் பணி இழப்பை சந்தித்துள்ளனர் எனவும் தங்களின் கவலையை தெரிவித்தனர்.
ஜி எஸ் டியும் பலரின் விமரிசனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. சிறு வியாபாரிகள் ஜி எஸ் டி அமுலாக்கத்தால் துயர் உருவார்கள் என சில பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். வெகு சிலரே ஜி எஸ் டி அமுலாக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.