குவாலியர்,

த்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு மார்பளவு சிலையுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்பட்டு வரும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்சே என்பவர். அவருக்கு  மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கோவில் கட்டப்பட்டு அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் இருந்து வருகிறார்.

காந்தியை சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும், அவருக்கு கோவில் கட்டப்படும் என்றும் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறி வந்துள்ள நிலையில், தற்போது,  குவாலியரில் உள்ள அகில பாரத இந்து மகாசபா அலுவலகத்தில் கோட்சேவுக்கு மார்பளவு சிலையுடன்  கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், அதையும் மீறி அகில பாரத இந்து மகா சபா அவரது மார்பளவு சிலையுடன் கோவிலை தங்களது அலுவலகத்துள்ளேயே அமைத்துள்ளது.

இதுகுறித்து கூறிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள்,  எங்கள் அலுவலக வளாகத்துக்குள்ளேயே கோட்சேவுக்கு கோவில் கட்ட எவரும் தடை விதிக்க முடியாது என்று கூறினர்.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் நினைவு நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து மகாசபா அறிவித்துள்ள நிலையில், நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15–ந் தேதி (நேற்று) கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கோட்சேவுக்கு கோவில்  கட்டியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.