நாக்பூர்:

போர் ஏதும் நடக்கவில்லை. ராமர் கோயில் கட்டுவதில் தாமதம் காரணமாக பதற்றம் ஏதும் இல்லை. ஆனால் எல்லையில் நம் வீரர்கள் மட்டும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என, பாஜக அரசுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ப்ரஹார் சமாஜ் ஜக்ருதி சன்ஸ்த அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், ” போர் ஏதும் இல்லாத சூழலிலும் எல்லையில் நம் வீரர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள். நம் பணியை நாம் சரியாக செய்யாததே இதற்கு காரணம். சுதந்திரத்துக்கு முன்பு நாட்டுக்காக மக்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு போரின் போது எல்லையில் நம் வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இப்போதுதான் போர் ஏதும் நடக்கவில்லையே? பிறகு ஏன் நம் வீரர்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள்.

வீரர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை. போர் காலத்தில்கூட இது போன்ற நிலை இருந்ததில்லை.

எல்லாவற்றுக்கும் அரசையோ, போலீஸையோ, ராணுவத்தையோ நம்பிக் கொண்டிருக்க கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு மக்களும் பங்காற்ற வேண்டும் என்றார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தாமதமாவது குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, “2025-ல் ராமர் கோயில் கட்டியே தீருவோம்” என்றார்.