டில்லி

ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் தவறான சீர்திருத்தம் செய்தமைக்கும், வேலைவாய்ப்பு குறைவுக்கும் மோடி அரசே காரணம் என கூறி உள்ளது.

ஆளும் பா ஜ க வின் தந்தை எனக் கூறப்படுவது ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆகும்.  ஆர் எஸ் எஸ் தொழிலாளர் பிரிவின் சங்கம் பாரதிய மஸ்தூர் சங்.  இது இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.  இந்த சங்கத்தின் தேசிய தலைவர் சாஜி நாராயண் சமீபத்தில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தற்போது இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியும் வேலை இழப்பும் கடுமையாக உள்ளது.  புதிய வேலைவாய்ப்பு என்பது அடியோடு நின்று விட்டது.  இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான செயல்பாடுகளே ஆகும். பிரதமர் நல்லெண்ணத்துடன் அறிவித்த பல திட்டங்கள் அரசு அதிகாரிகளால் தவறான திசைக்கு நாட்டை கொண்டு சென்று விட்டது.  தற்போது விவசாயிகள், தொழிலாளர்கள், பின் தங்கியோர், சிறு மற்றும் குறும் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்த தவறான சீர்திருத்தத்தால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஒரு புறம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என சொல்லிக் கொண்டு மறுபுறம் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்க தடை, சில பதவிகளை குறைத்தல் மற்றும் நீக்குதல்,  போன்ற பல நடவடிக்கைகளை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.  எனவே அவைகள் அனைத்தும் புது வேலை வாய்ப்பு உருவாக்குவதை தடுப்பதோடு, ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பையும் பறிக்கும் நிலையில் அமைந்துள்ளது.

எனவே அரசு உடனடியாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும்.  தேவையற்ற தவறான சீர்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும்.  இதன் மூலம் விவசாயம், கட்டுமானத்துறை போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களும் நலம் பெறுவார்கள்.  அத்துடன் தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக மாற்றப் பட வேண்டும்.  அத்துடன் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் உடனடியாக செய்ய வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தற்போது மோடி பல புதிய பொருளாதார திட்டங்களை அறிவித்து பல பொருளாதார சீர்திருத்த திட்டங்களை மாற்றி அமைப்பார் என தகவல் வெளி வருகின்றன.  இந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கம் இது போல ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தொழிலாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும், மற்றும் பா ஜ க தலைவர்களும் எந்தக் கருத்தையும் கூற மறுத்துள்ளனர்.