டில்லி:

தொடர் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடைமுறைகளும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த ஸ்வதேசி ஜக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது. அப்போது ஏர் இந்தியாவை சீரமைக்க மாற்று வழிகள் குறித்த அறிக்கையை தயார் செய்து வழங்குவதாக அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.

இதற்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து மகாஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து மகாஜன் கூறுகையில், ‘‘ஏர் இந்தியாவுக்கு இருக்கும் கடன் காரணமாக தான் அது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதனால் இதன் பங்குகளை விற்பனை செய்யாமல் ஏர் இந்தியாவின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஏர் இந்தியா லாபகரமாக இயங்கும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லாபகரமாக இயங்கி வந்த ஏர் இந்தியாவின் வழித்தடங்கள் இதர விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. தேவைப்பட்டால் பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டு கடனை அடைக்க நிதியை திரட்டலாம்’’ என்றார்.

ஏர் இந்தியாவை வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் இந்த அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது.