சென்னை:
தமிழகத்தில் 9லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார்.
மேலும், விரைவில் இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கிங்ஸ் மருத்துவமனை கிளை அமைக்கப்படும் என்றும்,
முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் மிக்க மாநிலங்களில் தமிழகம் இந்தியாவிலேயே 2–வது இடத்தை பிடித்துள்ளதாகவும், இதனால், பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றும் சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும், உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ் நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடுவாழ் தமிழ் மக்களையும், பிற முதலீட்டாளர்களையும் வரவேற்கும் வகையில் ‘‘யாதும் ஊரே” என்ற முன்னோடித் திட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நான் அறிவித்து, இத்திட்டத்தை அமெரிக்காவில் நான் துவக்கி வைத்தேன்.
இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளைச் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதும் இந்த அரசுமுறைப் பயணத்தின்போது நான் அறிந்தேன்.
தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட எனது தலைமையில் ஒரு தனிக் குழு, முதலமைச்சர் அலுவலகத்தில் முதலீடு செய்வதை எளிதாக்குதல் பிரிவு, பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகனப் பூங்கா, ஸ்டார்ட்–அப் எனப் புத்தொழில்களை ஊக்குவிக்க தனிக் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை என தொழில் துறை மேம்பட பல்வேறு கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது.
2015ம் ஆண்டு அம்மாவின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியினைத் தொடர்ந்து, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஈர்க்கப்பட்டன. இவற்றில் 272 நிறுவனங்கள் பணிகளை துவக்கி, பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் ஏறக்குறைய 90 சதவீதமாகும். இது அம்மாவின் அரசு மீது தொழில் முதலீட்டாளர்கள் கொண்ட திடமான நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது.
3,592 தொழில் திட்டம் தொடக்கம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 3,592 தொழில் திட்டங்கள், தங்கள் பணிகளைத் துவக்கி பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையினை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியினை மேற்கொள்ள சால்காம் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
இது தவிர, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் மின்னணு சாதன உற்பத்திக்கான பணிகளை துவக்கியுள்ளது. இதன் மூலம் 20,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு, முந்தைய காலங்களில் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள் கூட, தற்போது இந்த மக்கள் நல அரசின் தொடர் முயற்சிகளால் புத்துயிர் பெறும் சிறப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான அறிக்கையில், முதலீட்டை ஈர்க்கும் ஆற்றல் மிக்க மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2ம் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டினை அம்மாவின் அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது.
‘‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்” என்ற நாமக்கல் கவிஞர் அவர்களின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, திறன்மிகு மனித வளத்தை உருவாக்கும் நோக்கத்துடன், அம்மாவின் அரசு திறன் மேம்பாட்டிற்கான குறைந்த மற்றும் நீண்ட கால பயிற்சிகளை அளிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 28 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்துள்ளதும், இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 53 புதிய தொழிற் பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளதும் இதற்குச் சான்றாகும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, இது வரை சுமார் 7 லட்சம் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தலைசிறந்த 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக சுகாதாரத் துறை, ஆட்டோமொபைல் மற்றும் சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்துக்காக மூன்று உயர்திறன் பயிற்சி மையங்கள் அமைக்க சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாகச் செயல்படும்.
இத்தருணத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான திறன் போட்டியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது.
9லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன்
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக நடப்பு நிதியாண்டில், 31.12.2019 வரை சுமார் 9 லட்சம் குறு, சிறு விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. பருவ மழை சிறப்பாக இருந்ததாலும், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாலும், இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், வேளாண் பெருமக்களுக்கு உரிய விலை கிடைக்க, தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு நான் உத்தரவிட்டேன். இதன் மூலம், மக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போதிய மழையும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் உள்ள காரணத்தாலும், அதிக பரப்பிலான பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாலும், வேளாண் பெருமக்கள் இடுபொருட்கள் மற்றும் பிற பணிகளுக்காக கணிசமான பணத்தை செலவழித்திருப்பதாலும், மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட 1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க நான் உத்தரவிட்டு, அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றையலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாவின் எண்ணத்தில் உதித்த விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றினால் சமீபத்தில் வெளியான கால்நடை மற்றும் பறவை இனங்களுக்கான கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கை 7.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மாநில பொருளாதார வளர்ச்சியில் கூட கால்நடைத் துறை வளர்ச்சியின் பங்கு கூடியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் காரணமாக, கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது.
தலைவாசல் கால்நடை பூங்காவில் மருத்துவ கல்லூரி
வேளாண் பெருமக்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் சென்றடையும் நோக்குடன், தலைவாசல் கூட்டு ரோட்டுக்கு அருகில், நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது நான் அறிவித்தேன். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற பஃபலோ கால்நடைப் பண்ணையை பார்வையிட்டு அங்கு பயன்படுத்தப்படும் நவீன யுக்திகளை தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருமக்களும் பயன் அடையும் வகையில், தலைவாசலில் புதியதாக உருவாக்கப்பட உள்ள கால்நடைப் பூங்காவில் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வளாகத்தில் தமிழ்நாட்டின் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுகம்
பல திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழும் நமது மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் போலவே, கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கென ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவையை துவக்கி வைத்து, அம்மாவின் அரசு விவசாயிகள் பயன்பெற செவ்வனே செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் செலவில் திருவற்றியூர் குப்பம், 120 கோடி ரூபாய் செலவில் தரங்கம்பாடி மற்றும் 100 கோடி ரூபாய் செலவில் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசின் மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கண்ட மீன்பிடி துறைமுகங்களுக்காக தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் 420 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் இதுவரை அதிக அளவு நிதி உதவி பெற்ற மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
மேலும், கடலில் மீன்பிடிப்பு மேற்கொள்ளும் மீனவர்களின் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதிபடுத்திட தமிழ்நாடு அரசு முன் உதாரணமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆழ்கடல் மற்றும் அண்மைக்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு 25,000 விஎச்எப் கருவிகள், 160 செயற்கைக் கோள் கருவிகள், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் 507 டிரான்ஸ்பான்டர் கருவிகள் மற்றும் 200 நாவிக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிங்ஸ் மருத்துவமனை
சுகாதாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களையும், தொழில் நுட்பங்களையும் வெளிநாடுகளிலிருந்து அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 26.8.2019 முதல் 10.9.2019 வரை நான் அரசுமுறை பயணம் மேற்கொண்டேன்.
இங்கிலாந்திலுள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையினை தமிழ்நாட்டில் துவக்கிட அந்நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. அதன் அடிப்படையில், அந்நிறுவனத்துடன் பல்வேறு நிலையிலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.