சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ஈரோடு ராமலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு, என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. இவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் ராமலிங்கத்துக்கு சொந்தமான என்.ஆர் மற்றும் ஆர்.சி.சி.எல் கட்டுமான நிறுவனங்கள். ரகுபதிநாயகன் பாளையத்தில் உள்ள இவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். மற்றும் அதன் கிளைகள் உள்ள ஆந்திரா, கர்நாடகா உள்பட மாநில அலுவலகங்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.பி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், தேனாம்பேட்டை, பூக்கடை உள்பட சென்னை, திருச்சி, ஈரோடு என மொத்த 26 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த நிறுவனம், அரசு டெண்டர்கள் எடுத்து, மாநிலம் முழுவதும் குடிநீர் கட்டுமான பணிகள், சாலை கட்டமைப்பு பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. ல் இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட தொடங்கியவுடன், அலுவலகங்களில் பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். ஒரு வாரம் நடைபெற்ற இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது.
மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனைகளில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனைகளில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.