தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஒரத்தநாடு தென்னமாடு பிரதான சாலை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களையும், அதை கடத்தி வந்த 6 பேரை கொண்ட கடத்தல் கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டம் மாநிலம் முழுவதும் உள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி வருகிறது. அதன்தொடர்ச்சியாக அவ்வப்போது வாகன சோதனை, கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி ஒரத்தநாடு டிஎஸ்பி ஷனாஸ் இலியாஸ் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று தனிப்படை போலீசார், இரவு நேரத்தில் ஒரத்தநாடு தென்னமாடு பைபாஸ் பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, , அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காருக்கு பின்னால் வந்த லாரி, சேதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. இதனால், லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த லாரியில் ஆயிரம் 1000 கிலோ எடையுள்ள சுமார் 6 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் இருந்ததை கண்டறித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களின் பெயர் சிராஜுதீன் (35) அப்துல் வகாப் (38) அப்துல் ரஹீம் (29) ரஷ்த் (43) சர்புதீன் (45) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா பக்ருதீன் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் யாரிடம் இருந்து இந்த போதைப்பொருட்களை வாங்கினர், யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்று கொண்டிருந்தனர் என்பது குறித்து ஒரத்தநாடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.