அயோத்தி:
அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து, இரண்டு போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது போலி காசோலையின் சரிபார்ப்பு பணியின்போது இது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் அயோத்தி போலீசில் புகாரளித்துள்ளார்.
போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது பற்றி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் புகாரளித்தவுடன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மோசடி, நேர்மையின்மை, மற்றும் முக்கிய ஆவணங்களை திருடியது, ஆகிய குற்றச் சாட்டுகளில் ஐபிசி 419, 420, 467, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராம் மந்திர் அறக்கட்டளையிலிருந்து ரூபாய் 6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. நாங்கள் தற்போது இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறோம், மேலும் வங்கி கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த மோசடியை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம் என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பணமோசடி செய்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தான் முழுமையாக நம்புவதாக, இதைப் பற்றி புகாரளித்த ராம் ஜென்மபூமி தீர்த்தசேத்திரா அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.