வாணியம்பாடி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளா, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் நிலோபர் கபில். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலோபர் கபிலுக்கு போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணி மீது நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,  21ந்தேதி அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு நீங்குவதற்குள் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது அவரின் உதவியாளராக இருந்தவர் டி.ஜி.பி அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.

அதிமுக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேர் மீது பண மோசடிப் புகார் .

அவரது புகார் மனுவில்,  நிலோபர் கபில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, தனது தொழிலாளர் நலத்துறையிலும், வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 105 நபர்களிடம் 6 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரம் பணம் பெற்றுள்ளார் எனவும், பணம் அளிக்க வந்தவர்களிடம் அந்த பணத்தை உதவியாளராக இருந்த தன்னிடம் நேரடியாகக் கொடுக்கச் சொல்லியும், தனது வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லியும், காசோலையாகவும் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பணத்தை தன் வங்கிக் கணக்கில் பெற்றபின் அந்த பணத்தை முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் உத்தரவின் பேரிலும், அவர்களின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேரின் உத்தரவின் பேரிலும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி மாற்றி விட்டேன். ஆனால், பணம் பெற்றவர்களுக்கு,  கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி சொன்னபடி வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமலும் அமைச்சரும் அவர்களின் உறவினர்கள் 4 பேரும் அலைக்கழித்து வருகின்றனர். என்று குற்றம் சாட்டி உள்ளார். மேலும், அமைச்சரிடம் பணம் கொடுத்த 105 நபர்களின் பெயர்களையும், அவர்கள் கொடுத்த பணத்தையும் குறிப்பிட்டுள்ள பிரகாசம், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்களை மோசடி செய்து அவர்கள் அளித்த 6 கோடி ரூபாயில் இங்கிலாந்தில் உள்ள தனது மூத்த மகள் நர்ஜீஸ் பெயரில் சொத்து வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது அவரது உதவியாளராக பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.