சென்னை:
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பல இடங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேலூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு, பூந்தமல்லியில் ரூ.6.47 கோடி பணம் சிக்கியது. மேலும் திருப்பதி கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ரூ.6.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
ஏடிஎம் இயந்திரத்துக்கு நிரப்ப எடுத்துச்செல்வதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோல, திருப்பதி கோவிலுக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆயிரத்து 1380 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேப்பம்பட்டு சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மினிவேன் ஒன்றில் அப்போது, 56 பெட்டிகளில் ஆயிரத்து 1380 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பான விசாரணையில், அந்த தங்கம் அனைத்தும் திருப்பதி கோவிலுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தங்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்கம் கொண்டு செல்லப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று ஆயிரத்து 380 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.