பெங்களூரு:

ர்நாடகாவில் நடைபெற்று வரும் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில் இன்று காலை 9 மணிக்கு மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட எடியூரப்பா கர்நாடக தலைமை செயலகம் வருகை தந்தார்.

அதைத்தொடர்ந்து, தனது பணியை தொடங்கிய முதல்வர் எடியூரப்பா, முதல் கையெழுத்தாக, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான  ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான  விவசாயக்கடன்களை தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது.

எடியூரப்பா தலைமையிலான மந்திரி சபை பதவி ஏற்காத நிலையில், தனி ஒருவராக இன்று பதவி  ஏற்றுக்கொண்ட எடியூரப்பா, தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தலைமைசெயலகம் வந்த எடியூரப்பாவுக்கு வழி நெடுக பாஜ தொண்டர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். தலைமை செயலகம் அமைந்துள்ள விதான் சவுதாவுக்கு வந்த எடியூரப்பாவுக்கு  மாநில தலைமை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து முதல்வர் அறைக்கு சென்று அமர்ந்து தனது பணியை தொடங்கிய எடியூரப்பா, முதல் கையெழுத்தாக விவசாய கடன் தள்ளுபடிக்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.