டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு  மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில்,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவம்பர் 3ந்தேதி)  நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாகவும், விறுவிறுப்பாகவும்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைச் சேர்த்தது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்,   இந்திய வீராங்கனைகள்  ஷஃபாலி வர்மா 87 ரன்களையும், தீப்தி சர்மா 58 ரன்களையும் சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய  தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் அபார ஆட்டத்தை வெளிபடுத்தி சதமடித்து அசத்தினார். அதன்பின், 101 ரன்களில் வோல்வார்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளை  இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா அணி   45.3 ஓவர்களில் 246 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.

முதன்முதலாக இந்திய மகளிர் அணி வெற்றிக்கோப்பைபை தட்டியுள்ள நிலையில், இந்த மகளிர் உலக்கோப்பை வெற்றி மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அதிக ரன்கள் முதல், சதங்கள் வரை என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் பரிசுத்தொகையிலும் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இறுதிப்போட்டியில் தோல்வியைச் சந்தித்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு ரூ.19.91 கோடி பரிசுத்தொகையாக வழங்கபட்டுள்ளது.

இத்துடன், அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு ரூ.9.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையானது ரூ.122.5 கோடியாக ($13.88 மில்லியன் டாலர்கள்) உயர்த்தப்பட்டுள்ளது.

இது முந்தைய உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையைக் காட்டிலும் 297 சதவீதம் அதிகமாகும்.  முந்தைய மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையானது $3.5மில்லியனாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிகபட்ச பரிசுத் தொகையாகவும் இது அமைந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரூ.83 கோடி ($10மில்லியன், 2023-ன் கணக்கு படி) பரிசுத்தொகை யாக வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் அதனைவிட மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ பரிசுத்தொகை

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “1983 ஆம் ஆண்டு, கபில் தேவ் இந்தியாவை உலகக் கோப்பையை வெல்லச் செய்து கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தையும், ஊக்கத்தையும் கொண்டு வந்தார். அதே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் இன்று மகளிர் அணியும் கொண்டு வந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளனர். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வழியை வகுத்துள்ளனர். மேலும், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என ஒட்டுமொத்த அணிக்கும் ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவிக்கிறது” என்று கூறியுள்ளார்.

சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது. உலக கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது. எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,   திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய மகளிர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.