டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிதிஉதவி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு தரப்பில் ரூ.50ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்கு வரவேற்பு தெரிவித்த உச்சநீதிமன்றமும், அதற்கான வழிமுறைகளை வகுத்து, நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்டு, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும்,
மத்திய உள்துறை அமைச்சகத்தி துணைச் செயலர் ஆஷிஷ் குமார் சிங் மாநில தலைமைச்செயலர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசுகள் வழங்க வேண்டும். நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நிதியுதவியை மாநில அரசுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.