சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக  ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு தலா ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் 3ந்தேதி அறிவித்தார். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வரும் காவல்துறையினரின் பணியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு ஐயாயிர ரூபாய் வீதம் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது. இதன் மூலம் கொரோனா கால முன்கள பணியாளர்களான போலீசார் 1,17,184 பேருக்கு தலா ரூ.5000 ஊக்கத்தொகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.