லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோ பகுதியில், நள்ளிரவு சாலையில் ரூ.500 நோட்டுக்களை மர்மநபர்கள் வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. இது கொரோனாவை பரப்பும் சதி என்று அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சம்பவத்தன்று லக்னோவின் பேப்பர் காலனி பகுதியில் உள்ள சாலை மற்றும் சிலரது வீடுகளின் முன்பு ரூ.500 நோட்டுகள் வீசப்பட்டன. இதை கண்ட பலர், பணத்தை எடுக்க ஆர்வம் இருந்தாலும், அந்த பணத்தின் மூலம் கொரோனா பரவலை தீவிரமாக்க மர்ம நபர்கள் வீசியிருக்கலாம் என்ற பீதியில், காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் பெற்ற காவலர்கள் விரைந்து வந்து சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றினர். பின்னர் மருத்துவர்களிடம் ஆலோசித்து, அவர்களின் ஆலோசனையின்பேரில் அந்த பணத்தை 24 மணி நேரம் தனியாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சம் அடைந்துள்ள லக்னோவின் பேப்பர் மில் காலனி குடியிருப்பாளர்கள் ‘கொரோனா வைரஸைப் பரப்புவதற்காகஅவ ரூ .500 நோட்டுகள் சாலையில் வீசப்படுகின்றன’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும சமூக தூரத்தை பராமரிக்கும் போது, ’நாணயத்தாள்கள் மூலம் கொரோனா பரவலை அதிகரிக்க சிலர் திடடமிட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர், தனது வீட்டு வாசலில் ரூ.500 நோட்டு கிடந்ததாகவும், இதைக்கண்ட தனது மகன் அதிர்ச்சி அடைந்து என்னிடம் கூறினார் , நான் உடனே பாதுகாப்பு கவசங்களுடன் சானிடைசரைக் கொண்டு, அந்த ரூபாய் நோட்டின்மீது தெளித்து எடுத்ததாகவும், இதுகுறித்து பக்கத்து வீட்டினருடன் விவாதித்தாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பான வாட்ஸ்அப் தகவல்கள் வைரலாகி வருகிறது. ரூபாய் நோட்டுக்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்றும், பரப்ப முயற்சிப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.