சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு  கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஐம்பது லட்சம் மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் மேலும் ஒருவர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, கணேசபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 55).  இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற  சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தலில், அந்த பகுதியைச் சேர்ந்த 116-வது வார்டில்  காங்கிரஸ் கட்சி சார்பில்,  கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  இதனால்,  அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருந்துள்ளார். இதுதொடர்பாக ரஞ்சன் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை பயன்படுத்திக்கொண்ட ரஞ்சன்குமார்,  அடுத்த தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில்  மீண்டும்,  சென்னையில் கவுன்சிலர் சீட்டு பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் வேண்டும் எனவும்  தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதை நம்பி  ரஞ்சித் குமாரிடம்  அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக  ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி கவுன்சிலர் சீட் வாங்கி தருவது குறித்து உறுதி அளிக்கவில்லை. இதனால்,  ஜானகி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், ரஞ்சன்குமார் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இதுகுறித்து, ஜானகி, கடந்த நவ.30-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  ஆனால், புகார் குறித்து சென்னை காவல்துறை யினர் உரிய விசாரணை நடத்தாமல்  இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தி அடைந்த ஜானகி, இவ்விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையினரை கடுமையாக சாடியதுடன், உடினடியாக வழக்கு பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜானகியின் புகாரின்பேரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள  எம்.பி.ரஞ்சன் குமார், அவரது கூட்டாளி ரஞ்சித் குமார் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இதேபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.