சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு  இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த காலத்தில் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, கேஸ் விலை உயர்வை கடுமையாக விமர்சித்த  பிரதமர் மோடியின் பழைய வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியும் கேஸ் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார் என்று கிண்டல் செய்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

ஏற்கனவே, கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918.50-ல் இருந்து ரூ.818.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக விலை உயர்வில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்தது. ஆனால், அதே வேளையில்,  19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையில் கடந்த சில மாதங்களாகவே மாற்றம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஏப்ரல்  த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. அதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்தியஅரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காமல், சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 திடீரெ உயர்த்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.   இதன் மூலம் சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டபோது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர்  மோடி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 50 ரூபாய் விலை உயர்வு, ஏழைகளிடமிருந்து கேஸ் சிலிண்டரை தட்டிப் பறிக்கும் செயல் என மோடி கண்டிக்கும் வீடியோவை பகிர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து,  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி..

“’இறுதியாக பிரதமர் மோடி இந்தியா மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பிற்கு தகுந்த பதிலடியை கொடுத்துவிட்டார்.  பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தப்பட்டுவிட்டது.  அனைத்து இந்தியர்களும்  மீள்தன்மை கொண்ட, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மோடி பேசிய பழைய வீடியோ: