சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி  முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில்,  இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார்மீது சிபிஐ நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர்நீதிமன்றத்தை நாடினார்.

அவர் தாக்கல் மனுவில், தனது புகார் மீது சிபிஐ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.  மேலும், என்எல்சியில் ஒப்பந்த விதிகளுக்கு மாறாக சாம்பல் விற்பனை, ,காலாவதியான டெண்டர்களின் காலத்தை நீட்டித்தது; 73,000 டன் அளவுக்கு செம்மண்ணை சட்டவிரோத மாக அகற்றியது உள்பட பல்வேறு பணிகளில் என்.எல்.சி. அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  புகார்தாரர் தனது புகார் தொடர்பான முழு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு அழைத்தும்  ஒத்துழைக்கவில்லை  என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாருக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, சிபிஐ விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

[youtube-feed feed=1]